Saturday, January 10, 2009

வ.உ.சிதம்பரனார்


வ.உ.சி.யின் இனப்பற்று
திருச்சியில் 3 /1 / 1936 இல் கூடிய பார்ப்பனரல்லாதார் மாநாட்டுக்கு தூத்துக்குடியிலிருந்து கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்கள் எழுதி அனுப்பிய கடிதம்
அய்யன்மீர்,
நமது சென்னை மாகாணம் சம்பந்தப்பட்ட மட்டில், அதிலும் முக்கியமாக தமிழ்நாடு சம்பந்தப்பட்ட மட்டில், பெருந் தொகையினர்களாகிய பார்ப்பனரல்லாதார்கள் பல துறைகளிலும் சிறு தொகையினராகிய பார்ப்பனருடைய ஆதிக்கத்துக்குட்பட்டு, பின்னிலைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது நடுவு நிலைமையுடையார் யாரும் மறுக்க முடியாத உண்மை. அதைப் பற்றி நான் பெரிதும் கவலைஅடைகின்றேன். பார்ப்பனருடைய ஆதிக்கத்தை உதறித் தள்ளிவிட்டு பார்ப்பனரல்லாதார்கள் முன்னிலைக்குச் செல்லத் தொடங்கும் நன்னாளின் வரவை நான் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.

மீட்சிக்கு ஒரு வழி:
பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலிருந்து பார்ப்பனரலாதார்கள் வெளிப்படுவதற்கு ஒரே வழிதான் உண்டு. அவ்வழியாவது: பார்ப்பனரல்லாதார் ஜஸ்டிஸ் கட்சியினராயினும், சுயமரியாதைக் கட்சியினராயினும், சுயேட்சைக் கட்சியினராயினும், காங்கிரஸ் கட்சியினராயினும், காங்கிரஸ் முன்னேற்றத்திலும் பிராமணரல்லாதார்கள் முன்னேறத்திலும் சம அபிமானமுள்ள
என் போன்றவர்களாயினும், பார்ப்பனர் ஆதிக்கத்தை வெறுத்து காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி நிற்கும் எனது நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு போன்றவர்களாயினும் எல்லோரும் ஒன்று சேர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் பார்ப்பனர்களுக்குள்ள ஆதிக்கத்தை ஒழித்து, பார்ப்பனரல்லாதார்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கு உழைக்க வேண்டும். அவ்வாறு உழைக்க முற்படுங்கால் பார்ப்பனரல்லாதாருக்குள் இருக்கிற மேற்கூறிய ஜஸ்டிஸ் கட்சியினர், சுயமரியாதைக் கட்சியினர் முதலிய பல கட்சியினர்களும் தத்தம் கட்சிக்குரிய சொந்த கோட்பாடுகளை ஏனைய கட்சியினர்க்குள் புகுத்தவோ, ஏனைய கட்சியினர்கள் அங்கீகரிக்கும்படி செய்யவோ முயலவோ கூடாது. ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு கோட்பாட்டைக் கொண்டிருக்கலாம். தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கமிட்டியில் பார்ப்பனரல்லாதார்களுடைய ஆதிக்கத்தைஏற்படுத்தும் ஒரு விஷயத்தில் எல்லக் கட்சியினர்களும் ஒன்று சேர்ந்து உழைக்கலாம். இவ்வாறு செய்வதில் முரண்பாடு ஒன்றும் இல்லை.
பார்ப்பனர்கள் சூழ்ச்சி
தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கமிட்டியைக் கைப்பற்றுவதற்குப் பார்ப்பனரலாதார்கள் முயற்சி செய்கிறார்கள் என்று தெரிந்தவுடனேயே, பார்ப்பனர்கள், அரசாங்க உத்தியோகஸ்தர்கள், அரசாங்க உத்தியோகஸ்தர்கள் அல்லாதார்கள், வைதீகர்கள், வைதீகர் அல்லாதார்கள் - எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு சூழ்ச்சி செய்வார்கள். அச்சூழ்ச்சியாவது: பார்ப்பனரல்லாதார்களின் அனுபவம் இல்லாத இளைஞர்களையும், வயிறுப் பிழைப்புக்கு வழியில்லாத வறிஞர்களையும், கோடாரிக்காம்பு போன்றவர்களையும் பார்ப்பனர்கள் பொய்யுபதேசம், பொருள் கொடுத்தல் முதலியவற்றால் தமிழ்நாடுக் காங்கிரஸ் கமிட்டியுள் இழுத்து, சில பதவிகள் கொடுத்து, அவர்களைக் கொண்டு பார்ப்பனரல்லாத உண்மையான தேசாபிமானிகளைப் பிராசங்கங்கள் வழியாகவும், பத்திரிகைகள் வாயிலாகவும், துண்டுப் பிரசுரங்கள் வாயிலாகவும், நிந்திக்கவும், தேசத் துரோகிகள் என்று பறைசாற்றவும் முற்படுவார்கள்.அப்போது, அவ்விளைஞர்களையும், அவ்வறிஞர்களையும், அக்கோடாரிக் காம்புகளையும் பார்ப்பனரல்லாதார்களுடைய வழிக்குத் திருப்புவது அசாத்தியமான காரியம். அவர்கள் பிரசாரங்களுக்கெல்லாம் ஒன்றிரட்டியாகப் பார்ப்பனரல்லாதார்கள் தங்கள் சொல்லுகுட்பட்ட இளைஞர்களையும் வறிஞர்களையும் கொண்டு எதிர் பிரசாரங்கள் செய்ய வேண்டும். முன் வைத்த காலைப் பின்வைக்கலாகாது. "எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு."
வேற்றுமைகளை மறப்பீர்
பார்ப்பனரல்லாத சகோதரர்களே! சாதி வேற்றுமை, மத வேற்றுமை, கட்சி வேற்றுமை, கோட்பாடு வேற்றுமை முதலியவறையெல்லாம் விடுத்து நீங்களெல்லோரும் ஒன்று சேர்ந்து பார்ப்பனரல்லாதார்கள் சமூகத்தை முன்னிலைக்கும், நன்னிலைக்கும் கொண்டு வருவீர்களாக.
உங்கள்மீது அன்புள்ள
வ.உ.சிதம்பரம்பிள்ளை
(ஆதாரம்: குடி அரசு, 17/5/1936 )
நன்றி:விடுதலை, 119ஆவது ஆண்டு பிறந்தநாள் மலர்
** பேராயக் கட்சியிலேயே இருந்து, இந்த நாட்டு விடுதலைக்காக அல்லலுற்று, சிறையிலடைக்கப்பட்டு, செக்கிழுத்து அருந்திறல் போராட்ட மறவராம் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதமபரனார் தம் பிற்காலத்தில் பார்ப்பனர்களுடைய தன்னலப் போக்கினை நன்கு உணர்ந்ததன் விளைவே மேற்கண்ட மடல். இன்றும் ஈழத் தமிழர் நல்வாழ்வில் கவலைக் கொண்டுள்ள தமிழர்கள் அனைவரும் சிதம்பரனார் இன ஒருமைக்காகக் கூறியவற்றைக் கடைப்பிடித்து ஒரு சேரக் குரல் கொடுக்க முன்வர வேண்டும். - முத்துச்செல்வன்

No comments:

Post a Comment