Saturday, January 10, 2009

வ.உ.சிதம்பரனார்


வ.உ.சி.யின் இனப்பற்று
திருச்சியில் 3 /1 / 1936 இல் கூடிய பார்ப்பனரல்லாதார் மாநாட்டுக்கு தூத்துக்குடியிலிருந்து கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்கள் எழுதி அனுப்பிய கடிதம்
அய்யன்மீர்,
நமது சென்னை மாகாணம் சம்பந்தப்பட்ட மட்டில், அதிலும் முக்கியமாக தமிழ்நாடு சம்பந்தப்பட்ட மட்டில், பெருந் தொகையினர்களாகிய பார்ப்பனரல்லாதார்கள் பல துறைகளிலும் சிறு தொகையினராகிய பார்ப்பனருடைய ஆதிக்கத்துக்குட்பட்டு, பின்னிலைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது நடுவு நிலைமையுடையார் யாரும் மறுக்க முடியாத உண்மை. அதைப் பற்றி நான் பெரிதும் கவலைஅடைகின்றேன். பார்ப்பனருடைய ஆதிக்கத்தை உதறித் தள்ளிவிட்டு பார்ப்பனரல்லாதார்கள் முன்னிலைக்குச் செல்லத் தொடங்கும் நன்னாளின் வரவை நான் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.

மீட்சிக்கு ஒரு வழி:
பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலிருந்து பார்ப்பனரலாதார்கள் வெளிப்படுவதற்கு ஒரே வழிதான் உண்டு. அவ்வழியாவது: பார்ப்பனரல்லாதார் ஜஸ்டிஸ் கட்சியினராயினும், சுயமரியாதைக் கட்சியினராயினும், சுயேட்சைக் கட்சியினராயினும், காங்கிரஸ் கட்சியினராயினும், காங்கிரஸ் முன்னேற்றத்திலும் பிராமணரல்லாதார்கள் முன்னேறத்திலும் சம அபிமானமுள்ள
என் போன்றவர்களாயினும், பார்ப்பனர் ஆதிக்கத்தை வெறுத்து காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி நிற்கும் எனது நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு போன்றவர்களாயினும் எல்லோரும் ஒன்று சேர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் பார்ப்பனர்களுக்குள்ள ஆதிக்கத்தை ஒழித்து, பார்ப்பனரல்லாதார்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கு உழைக்க வேண்டும். அவ்வாறு உழைக்க முற்படுங்கால் பார்ப்பனரல்லாதாருக்குள் இருக்கிற மேற்கூறிய ஜஸ்டிஸ் கட்சியினர், சுயமரியாதைக் கட்சியினர் முதலிய பல கட்சியினர்களும் தத்தம் கட்சிக்குரிய சொந்த கோட்பாடுகளை ஏனைய கட்சியினர்க்குள் புகுத்தவோ, ஏனைய கட்சியினர்கள் அங்கீகரிக்கும்படி செய்யவோ முயலவோ கூடாது. ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு கோட்பாட்டைக் கொண்டிருக்கலாம். தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கமிட்டியில் பார்ப்பனரல்லாதார்களுடைய ஆதிக்கத்தைஏற்படுத்தும் ஒரு விஷயத்தில் எல்லக் கட்சியினர்களும் ஒன்று சேர்ந்து உழைக்கலாம். இவ்வாறு செய்வதில் முரண்பாடு ஒன்றும் இல்லை.
பார்ப்பனர்கள் சூழ்ச்சி
தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கமிட்டியைக் கைப்பற்றுவதற்குப் பார்ப்பனரலாதார்கள் முயற்சி செய்கிறார்கள் என்று தெரிந்தவுடனேயே, பார்ப்பனர்கள், அரசாங்க உத்தியோகஸ்தர்கள், அரசாங்க உத்தியோகஸ்தர்கள் அல்லாதார்கள், வைதீகர்கள், வைதீகர் அல்லாதார்கள் - எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு சூழ்ச்சி செய்வார்கள். அச்சூழ்ச்சியாவது: பார்ப்பனரல்லாதார்களின் அனுபவம் இல்லாத இளைஞர்களையும், வயிறுப் பிழைப்புக்கு வழியில்லாத வறிஞர்களையும், கோடாரிக்காம்பு போன்றவர்களையும் பார்ப்பனர்கள் பொய்யுபதேசம், பொருள் கொடுத்தல் முதலியவற்றால் தமிழ்நாடுக் காங்கிரஸ் கமிட்டியுள் இழுத்து, சில பதவிகள் கொடுத்து, அவர்களைக் கொண்டு பார்ப்பனரல்லாத உண்மையான தேசாபிமானிகளைப் பிராசங்கங்கள் வழியாகவும், பத்திரிகைகள் வாயிலாகவும், துண்டுப் பிரசுரங்கள் வாயிலாகவும், நிந்திக்கவும், தேசத் துரோகிகள் என்று பறைசாற்றவும் முற்படுவார்கள்.அப்போது, அவ்விளைஞர்களையும், அவ்வறிஞர்களையும், அக்கோடாரிக் காம்புகளையும் பார்ப்பனரல்லாதார்களுடைய வழிக்குத் திருப்புவது அசாத்தியமான காரியம். அவர்கள் பிரசாரங்களுக்கெல்லாம் ஒன்றிரட்டியாகப் பார்ப்பனரல்லாதார்கள் தங்கள் சொல்லுகுட்பட்ட இளைஞர்களையும் வறிஞர்களையும் கொண்டு எதிர் பிரசாரங்கள் செய்ய வேண்டும். முன் வைத்த காலைப் பின்வைக்கலாகாது. "எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு."
வேற்றுமைகளை மறப்பீர்
பார்ப்பனரல்லாத சகோதரர்களே! சாதி வேற்றுமை, மத வேற்றுமை, கட்சி வேற்றுமை, கோட்பாடு வேற்றுமை முதலியவறையெல்லாம் விடுத்து நீங்களெல்லோரும் ஒன்று சேர்ந்து பார்ப்பனரல்லாதார்கள் சமூகத்தை முன்னிலைக்கும், நன்னிலைக்கும் கொண்டு வருவீர்களாக.
உங்கள்மீது அன்புள்ள
வ.உ.சிதம்பரம்பிள்ளை
(ஆதாரம்: குடி அரசு, 17/5/1936 )
நன்றி:விடுதலை, 119ஆவது ஆண்டு பிறந்தநாள் மலர்
** பேராயக் கட்சியிலேயே இருந்து, இந்த நாட்டு விடுதலைக்காக அல்லலுற்று, சிறையிலடைக்கப்பட்டு, செக்கிழுத்து அருந்திறல் போராட்ட மறவராம் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதமபரனார் தம் பிற்காலத்தில் பார்ப்பனர்களுடைய தன்னலப் போக்கினை நன்கு உணர்ந்ததன் விளைவே மேற்கண்ட மடல். இன்றும் ஈழத் தமிழர் நல்வாழ்வில் கவலைக் கொண்டுள்ள தமிழர்கள் அனைவரும் சிதம்பரனார் இன ஒருமைக்காகக் கூறியவற்றைக் கடைப்பிடித்து ஒரு சேரக் குரல் கொடுக்க முன்வர வேண்டும். - முத்துச்செல்வன்

Thursday, January 8, 2009

கவியரசு முடியரசனார்

புலியேறென எழுவாய்
பதினாறுசீர்ச் சந்த விருத்தம்
உழுவார்கரம் உயர்வாய்வர
உலகோர்முயல் திருநாள்
உனதாகிய திருநாடொரு
தமிழ்நாடென வருநாள்
குழுவார்கழை பிழிபாகுடன்
முறியாமுனை அரிசி
குழைவாயமு துணவாகிடக்
குலமாதர்கள் தருநாள்

எழுஞாயிறு புலர்காலையில்
எழில்வான்மிசை வருமே
இதுநாள்வரை துயராய்வரு
பனிநாள்இனி அறுமே
தொழுவாய்கதிர் தொழுவாய்கதிர்
சுடரால்நலந் தரலால்
கடுவாய்பகை விடுவாய்மயல்
துணிவாயெழு தமிழா

புழுவாவுனை இகழ்வார்முனம்
புலியேறென எழுவாய்
பொதுவாழ்வினில் நிலையோடிரு
புதுவாழ்வினை அடைவாய்
தொழுதேவளர் உடல்வாழ்வது
தொலையாயெனில் உனையே
தொழுநோயொடு திரிவாரினும்
இகழ்வாரிதை நினைவாய்

மொழிவாவும் இனம்வாழவும்
முயல்வாய்தமிழ் மகனே
முரணாதொரு முகமாயெழு
முடியாததும் உளதோ?
இழிவாகிய நிலைஓடிட
எடுவாள்பகை மலையோ?
எழுவாய்தலை நிமிர்வாயஉனை
எதிர்வாரினி இலையே.

Wednesday, January 7, 2009

தந்தை பெரியார்

".. உலக வாழ்க்கையில் ஈடுபடாத வாலிபர்கள் ஆகிய உங்கள்மனம்தான் பொதுநலத்திற்கு ஏற்ற பரிசுத்தமான தன்மையுடையது. உங்களிடம்தான் எவ்வித தியாகத்தையும் எதிர்பார்க்கலாம். ஆனால் இதுபோழ்து நமது நாட்டில் வாலிபர்கள் முனிலையில் மலிந்து கிடப்பது ராஜீய (அரசியல்) விஷயம். அது உங்களைப் போன்ற வாலிபர்களுக்கு ஆபத்தான காரியம் என்று எச்சரிக்கை செய்கிறேன். பொதுவாகவே ராஜீய விஷயம் என்பது ஒரு நாணயக் குறைவான காரியம்.இது பற்றி அநேகம் பெரியோர்கள் ராஜீய விஷயத்தில் ஈடுபடுவதென்பதை மனிதன் எல்லாவித அயோக்கியத் தனமான காரியங்களயும் செய்து பார்த்துப் பிழைக்க முடியாவிட்டால் கடைசியாகப் பிழைப்புக்கு வழி ஏற்படுத்திக்கொள்ளத்த்தக்க அயோக்கியத்தனம் என்று சொல்லி இருக்கிறார்கள்.என்னுடைய ஆறேழு வருஷ கால அனுபவத்தினால் அது சரி என்றே உணர்கிறேன். ஆதலால் உற்சாகமாகப் பேசும் வயிற்றுப்பிழைப்பு அரசியல்வாதிகளைக் கண்டும் அவர்கள் பேச்சைக் கேட்டும் ஏமாந்து போகாதீர்கள். உண்மையான அரசியல் சுதந்திரத்திற்கு இருக்க வேண்டிய பக்குவமே வேறு. இந்த நாட்டுக்கு எந்த விதத்திலும் இப்போது அரசியல் சுதந்திரம் அவ்வளவு முக்கியமானதல்ல. இந்நாட்டு மனித சமூகத்திற்கு வேண்டியதெல்லாம் முதலில் சுயமரியாதைதான். அதுதான் ஒவ்வொரு மனிதனுக்கும் பிறப்புரிமை."
சென்னை பார்ப்பனரல்லாத வாலிப சங்கத்தில் பேசிய உரையிலிருந்து: குடி அரசு 12.09.1926

Tuesday, January 6, 2009

பாவேந்தர்

கோயிலார்

உயிர்போன்ற உங்கள்தமிழ்
கடவுளுக்கே உவப்பாதல்
இல்லை போலும்!
உயிர்போன்ற உங்கள்தமிழ்
உரைத்தக்கால் கடவுளதை
ஒப்பார் போலும்!
பயிரழிக்கும் விட்டிலென
தமிழ்மொழியைப் படுத்தவந்த
வட மறைதான்
செயிர்தீர வாழ்த்துதற்கும்
தேவையினைச் சொல்லுதற்கும்
உதவும் போலும்!

மடிகட்டிக் கோயிலிலே
மேலுடையை இடுப்பினிலே
வரிந்து கட்டிப்
பொடிகட்டி இல்லாது
பூசியிரு கைகட்டிப்
பார்ப்பா னுக்குப்
படிகட்டித் தமிழரெனப்
படிகட்டின் கீழ்நின்று
தமிழ்மா னத்தை
வடிகட்டிஅவன் வடசொல்
மண்ணாங்கட் டிக்குவப்பீர்
"மந்தரம்" என்றே.

காற்செருப்பை பிறனொருவன்
கழிவிடத்தில் தள்ளினும்
பொறாத உள்ளம்
மேற்படுத்தும் எவற்றினுக்கும்
மேற்பட்ட தன்மொழியைத்
தமிழைத் தீயோர்
போற்றுவதற் குரியதொரு
பொதுவினின்று நீக்கிவைத்தால்
பொறுப்ப துண்டோ?
வேற்றுவரின் வடமொழியை
வேரறுப்பீர் கோயிலிலே
மேவி டாமே.

சொற்கோவின் நற்போற்றித்
திருஅகவல் செந்தமிழில்
இருக்கும் பொது
கற்கோயில் உட்புறத்தில்
கால்வைத்த தெவ்வாறு
சகத்ர நாமம்?
தெற்கோதும் தேவாரம்
திருவாய்நன் மொழியான
தேனி ருக்கச்
செக்காடும் இரைச்சலென
வேதபா ராயாணமேன்
திருக்கோ யில்பால்?

திருப்படியில் நின்றபடி
செந்தமிழில் பெரும்படியார்
அருளிச் செய்த
உருப்படியை அப்படியே
ஊரறியும் படியுரைத்தால்
படியும் நெஞ்சில்!
தெருப்படியிற் கழுதையெனச்
செல்லுபடி யாகாத
வடசொற் கூச்சல்
நெருப்படியை எப்படியோ
பொறுத்திடினும் நேர்ந்தபடி
பொருள் கண்டீரோ!
--- பாவேந்தர் பாரதிதாசனார், தமிழியக்கம்



Monday, January 5, 2009

பாவாணர்

"ஓங்க லிடைவந் துயட்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கே
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ் "


பாவாணர் பொன்மொழிகள்
மாந்தனெனக் குமரிமலை மருவியவன் தமிழனே!
மாண்புடைய நாகரிகம் மலர்ந்தவனும் தமிழனே!

மொழிவளர்ச்சி முதன்முதலாய் முற்றியவன் தமிழனே!
மோனையுடன் சிறந்தசெய்யுள் பேசியவன் தமிழனே!

துறைநகரால் கடல்வணிகம் தோற்றியவன் தமிழனே!
பிறநிலத்து வணிகரையும் பேணியவன் தமிழனே!

தொன்மையொடு முன்மை; தொன்மையொடு நன்மை;
தாய்மையொடு தூய்மை; தழுவிளமை வளமை.


பகுத்தறிவே மானமுடன் படைத்தவனும் தமிழனே!
பகுத்தறிவால் திணைவகுத்த பண்புடையான் தமிழனே!


பனிமலையை முதன்முதற்கைப் பற்றியவன் தமிழனே!
பலமுறைமீன் புலிவில்அதிற் பதித்தவனும் தமிழனே!


பலகலையும் பலநூலும் பயிற்றியவன் தமிழனே!
பலபொறியும் மதிலரணிற் பதித்தவனும் தமிழனே!


இருதிணைக்கும் ஈந்துவக்கும் இன்பமுற்றான் தமிழனே!
ஈதலிசை யாவிடத்தே இறந்தவனும் தமிழனே!


கடல்நடுவே கலஞ்செலுத்திக் கரைகண்டவன் தமிழனே!
கலப்படையால் குணத்தீவைக் காத்தவனும் தமிழனே!


பகுத்தறிவைச் சற்றும் பயன்படுத்தார் கல்வி
மிகுத்ததனால் உண்டோ பயன்?

தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே

தமிழுயரத் தானுயர்வான் தான்.

தமிழா உன்றன் முன்னவனே

தலையாய் வாழ்ந்த தென்னவனே

அமிழ்தாம் மாரி அன்னவனே

அழகாய் முதநூல் சொன்னவனே