Thursday, January 8, 2009

கவியரசு முடியரசனார்

புலியேறென எழுவாய்
பதினாறுசீர்ச் சந்த விருத்தம்
உழுவார்கரம் உயர்வாய்வர
உலகோர்முயல் திருநாள்
உனதாகிய திருநாடொரு
தமிழ்நாடென வருநாள்
குழுவார்கழை பிழிபாகுடன்
முறியாமுனை அரிசி
குழைவாயமு துணவாகிடக்
குலமாதர்கள் தருநாள்

எழுஞாயிறு புலர்காலையில்
எழில்வான்மிசை வருமே
இதுநாள்வரை துயராய்வரு
பனிநாள்இனி அறுமே
தொழுவாய்கதிர் தொழுவாய்கதிர்
சுடரால்நலந் தரலால்
கடுவாய்பகை விடுவாய்மயல்
துணிவாயெழு தமிழா

புழுவாவுனை இகழ்வார்முனம்
புலியேறென எழுவாய்
பொதுவாழ்வினில் நிலையோடிரு
புதுவாழ்வினை அடைவாய்
தொழுதேவளர் உடல்வாழ்வது
தொலையாயெனில் உனையே
தொழுநோயொடு திரிவாரினும்
இகழ்வாரிதை நினைவாய்

மொழிவாவும் இனம்வாழவும்
முயல்வாய்தமிழ் மகனே
முரணாதொரு முகமாயெழு
முடியாததும் உளதோ?
இழிவாகிய நிலைஓடிட
எடுவாள்பகை மலையோ?
எழுவாய்தலை நிமிர்வாயஉனை
எதிர்வாரினி இலையே.

No comments:

Post a Comment